புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு, ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நேற்று காலை புவனேஸ்வரில் உள்ள பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
டெல்லி புறப்படுவதற்கு முன்னர் திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், “குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அனைவரும் தேர்தலில் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், அனைத்து வாக்காளர்களிடமும் (எம்.பி. எம்எல்ஏ.க்கள்) ஆதரவு கேட்பேன்” என்றார்.
இந்நிலையில், டெல்லி வந்த திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்முவுக்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அடிப்படை சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்த அவரது புரிதல் ஆகியவை மிக சிறப்பானவை” என்று தெரிவித்துள்ளார்.