குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் மாநிலங்களவைச் செயலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
டெல்லி ஒடிசா பவனில் இருந்து புறப்பட்ட திரவுபதி முர்மு நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பிர்சா முண்டா ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்றக் கட்டடத்துக்குச் சென்ற திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவைச் செயலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவருடனிருந்தனர்.
அவரது வேட்பு மனுவை பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் முன்மொழிந்தனர். இதேபோல் ஐம்பதுக்கு மேற்பட்டோர் வழிமொழிந்தனர்.