குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.
இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்குகிறார்.
இந்நிலையில் இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கலின் போது உடன் இருந்தனர். மேலும், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வேட்புமனுத் தாக்கலின் போது உடனிருந்தனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரிடம் முழு ஆதரவு தரும்படி, திரெளபதி முர்மு கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கும் யஷ்வந்த் சின்ஹா, வரும் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளக் கட்சிகள் தவிர்த்து, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.