குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றாக தனி வீடுகள் எனப்படும் ‘வில்லா’ வீடுகளை வாங்கவே மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வீடு என்பது தனிமனிதர்களின் கனவாகி மாறிப் போன சூழலில், மக்கள் நெருக்கடி பெருகியதன் காரணமாக சென்னை போன்ற மாநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை 90-களின் தொடக்கத்திலிருந்தே அதிகரிக்கத் தொடங்கியது. நுங்கம்பாக்கம், தி நகர், அண்ணாநகர், கோயம்பேடு, எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 4 மாடிகளுக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட தொடங்கின. பணிகளுக்குச் செல்வது, குழந்தைகளுக்கான கல்வி போன்ற காரணங்களால் நகருக்குள் அடுக்குமாடி குடியிருப்புகளை மக்கள் அதிக அளவில் வாங்கினர். அதன் தொடர்ச்சியாக, புறநகர் பகுதிகளையும் தாண்டி சென்னை நகரின் வளர்ச்சி விஸ்தரிக்க தொடங்கியதால், பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் 50 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
image
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் 2000-ம் ஆண்டுக்கு பிறகு ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி சாலை, பெங்களூர் சாலை, திருப்பதி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய இணைப்பு சாலைகளில் அதிக அளவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் குடிபெயரத் தொடங்கினர்.
அதிகரிக்கும் தனி வீடு ஆசை…
இந்நிலையில், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தனி வீடுகளை வாங்குவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுவதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெரும்பாலும் ஒரே வடிவமைப்பில் தான் கட்டப்படுகின்றன. அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருக்கும் நிலங்கள், கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமாக இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால், மக்கள் தனி வீடுகளை விரும்புவதாக கூறப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தொற்று வேகமாக பரவியதும், மக்கள் தனி வீடுகளை நோக்கி படையெடுக்க முக்கிய காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
image
இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் ‘வில்லா’ வகை வீடுகளையே கட்டுமான நிறுவனங்கள் தற்போது அதிக அளவில் கட்டி வருகின்றன. தனி வீடுகளாக மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்பிலும் கட்டப்படுவதால் மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாக ஓஎம்ஆர், ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் வருடங்களில் அடுக்குமாடி வீடுகளை விட ‘வில்லா’ வீடுகளே அதிக அளவில் கட்டப்படுகின்றன. மக்கள் அதிக அளவில் தனி வீடுகள் வாங்க விரும்புவதால், ஈசிஆர் பகுதிகளில் தனி வீடுகளின் விலை 5 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கட்டுமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 1000 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை விட, தனி வீடுகள் கட்டுவதற்கு 30 முதல் 40 சதவீதம் செலவு ஆகும் நிலையில், நிலத்தின் மதிப்பு காரணமாக தனி வீடுகள் மீதான மோகம் கொரோனா காலத்திற்கு பிறகு வீடுகளை நோக்கி வாடிக்கையாளர்களை வர வைப்பதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் – ந.பால வெற்றிவேல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.