நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, தேவாலா, சேரம்பாடி. பிதர்காடு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. கூடலூர் வனக்கோட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 16.14 சதவீதம் வனப்பகுதியாகும்.
இந்த இரண்டு தாலுகாக்களிலும் 11 ஆயிரத்து 658.165 ஹெக்டேர்பரப்பிலான வனம் 260 பாகங்களாக பிரிந்துள்ளன. இதனால்,யானைகள் முதுமலையிலிருந்து கேரளாவுக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. தற்போது யானைகள்இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.
இதுதொடர்பாக கூடலூர் தொகுதி மக்கள் கூறும் போது, ‘‘யானைகள், முதுமலையிலிருந்து பாட்டவயல், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சென்னக்கொல்லி, சுவாமிமலை, காபிக்காடு வழியாக கூடலூர்-கள்ளிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை 67-ஐ கடந்து, கேரள மாநில எல்லையான கோட்டமலைக்கு செல்கின்றன.
அங்கிருந்து கேரள மாநிலம் நிலம்பூர் அமராம்பலம் சரணாலயத்தை அடைகின்றன. இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் யானைகள் திசை மாறி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து விடுகின்றன. யானைகள் நடமாட்டத்தின் போது குறுக்கிடும் மனிதர்களை தாக்குகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் யானைகள் மற்றும் வன விலங்குகள் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஓவேலி பகுதியை சேர்ந்த இருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்தனர்’’ என்றனர்.
மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறும் போது, ‘‘கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள ஓவேலி பகுதி, கேரளாவின் நிலம்பூர் வடக்கு வனக் கோட்டம், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கூடலூர் வனக் கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணையும் பகுதியாக உள்ளது.
இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் அதிக அளவில் பலா மரங்கள், வாழை, பாக்கு தோட்டங்கள் இருப்பதே, யானைகள் இந்த வாழ்விடத்தை நோக்கி வர முக்கியகாரணம். தற்போது யானைகள் நிலம்பூரில் இருந்து ஓவேலி வழியாக முதுமலை நோக்கி வருகின்றன. யானைகள் நீண்ட தூரம் நகரும் விலங்காக இருப்பதால் மனித-யானை மோதல் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
குறிப்பாக பசுமையான மற்றும் இலையுதிர் காடுகளின் பரப்பு, நகர்மயமாதல், தேயிலைத் தோட்டங்கள் கடந்த 40 வருடங்களாக யானைகளின் வாழ்விடத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.
ஓவேலி வனச் சரகத்தில் மனித-விலங்கு மோதல்களை குறைப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டிலிருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க ஆளில்லா விமானக் குழுக்களை அனுப்புதல், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவுதல், காட்டு யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழையாத வகையில் புகை மற்றும் நெருப்பு அமைக்கும்பணிகள்நடைபெற்று வருகின்றன.
யானைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் தினசரி அறிவிப்பு வழங்கி விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.