பேருந்து உரிமையாளரிடம் பணம் கேட்டு பேருந்தை கடத்தியதாக பாஜக பிரமுகர் சூர்யா கூட்டுக் கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை கெடிலம் அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும், காரும் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் சூர்யாவுக்கு சொந்தமான காரின் இடது புறத்தில் சேதம் ஏற்பட்டது.
இதுகுறித்து விக்கிரவாண்டியில் இருந்த பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலையிடம், சூரியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதற்கு காப்பீட்டு நிறுவனம் கொடுக்கும் பணத்திலிருந்து, கூடுதலாக ஏற்படும் செலவு தொகையை கொடுத்து விடுவதாக, பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த 4 நாட்கள் தொலைபேசி வாய்லாக, பேருந்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ள சூரியா முயற்சி செய்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் பேருந்தின் உரிமையாளர், யாருடைய தொலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை. பின்னர் தொடர்பு கொண்டபோது அவரிடம் 4.5 லட்சம் ரூபாய் பணத்தை இழப்பீடாக கொடுக்கும்படி சூரியா கேட்டுள்ளார்.
பேருந்தின் உரிமையாளர் அதனை கொடுக்க சம்மதித்தவுடன், அவரிடம் 5 லட்சம் ரூபாய் வேண்டுமென நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனை பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலை ஏற்க மறுத்துவிட்டார்.
இதன் பின்னர் அந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த 19 ஆம் தேதி, நின்றுகொண்டிருந்தது. அப்போது ஆத்திரத்தில் இருந்த சூர்யாவும், அவரது நண்பர்கள் 11 பேரும் சேர்ந்து, அந்த பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறங்கச் செய்தனர். பின்னர் அப்பேருந்தை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து தனியார் பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலை சார்பில் மேலாளர் முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கூட்டுக் கொள்ளை, மிரட்டல், அசிங்கமாக திட்டுதல் உள்ளிட்ட நான்கு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திருச்சி மாவட்ட குற்றவியல் இரண்டாம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் (7.7.2022 வரை) நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி பாஜகவினர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினருக்கும், போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து சூர்யா சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM