கோயம்புத்தூர் ஆவின் பொருட்கள் விற்பனையில் ரூ.1 கோடி முறைகேடு செய்தது கண்டறியப்பட்ட நிலையில் 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கோவை மலுமிச்சம்பட்டி, மதுக்கரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பால் விற்பனை பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். இதனை அடுத்து கோவை ஆர்.எஸ்.புரம் பால் விற்பனை அதிகாரியான சுப்பிரமணியம் மற்றும் சுஜித்குமார் ஆகிய 2 பேரும் தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுப்பிரமணியம் ஆவின் அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் ஆவின் பார்லர் பொறுப்பாளராக இருந்தபோது ரூ.20 லட்சமும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் பால் விற்பனை அலுவலராக பணியாற்றியபோது ரூ.70 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சம் பால் பொருட்களை விற்றும் அதில் வந்த பணத்தை ஆவினுக்கு செலுத்தாமல் இருந்து வந்தது அமைச்சரின் ஆய்வில் தெரியவந்தது. சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்ததும் அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது. அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட சில தினங்களிலேயே 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM