பணகுடியில் எந்த ஆவணமும் இன்றி சாலையில் ஓட தகுதியில்லா வாகனத்தை ஆம்புலன்ஸ் என அறிமுகம் செய்துவைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட இருப்பதாக துண்டுப் பிரசுரங்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பாகவே விநியோகிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ஆம்புலன்ஸ் அறிமுக விழா பணகுடி காவல் நிலையம் முன்பு நடைபெற்றது.
இதை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருண்ராஜா துவக்கி வைத்தார். இதில், மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆம்புலன்ஸ் பணகுடி காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு அங்கு இருந்து வெளிவருவது போல் அறிமுக விழா நடைபெற்றது.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது. அதேபோல் வாகனத்தின் எப்சி எனப்படும் உறுதி தன்மை 2010ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. மேலும் அந்த வாகனத்திற்கு 2012ஆம் ஆண்டுக்கு பின் சாலை வரி கட்டப்படவே இல்லை.
இப்படி இருக்க ஒரு காவல் உதவி ஆய்வாளரே பத்து வருடங்களாக உறுதித்தன்மை காட்டப்படாத ஒரு வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் என்று அறிமுகம் செய்து வைத்தது இந்த பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. விபத்து ஏற்படும் முன் இந்த வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM