சென்னை: சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஒ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஜூன் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளன.
நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இஸ்ரோ மூலம் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
அதன்படி சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜூன் 30-ம்தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன.
இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் 29-ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.
இதில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. இது வண்ணப் புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. இதுதவிர 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. இது அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும்.
இதனுடன் கல்விசார் பணிகளுக்காக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலை. மாணவர்கள் வடிவமைத்த ‘ஸ்கூப்-1’ என்ற செயற்கைக்கோளும் (2.8 கிலோ) விண்ணில் ஏவப்பட உள்ளது.
செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பாகமான பிஎஸ் 4 இயந்திரம் மூலம் எதிர்காலத் தேவைக்கான சில பரிசோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட இஸ்ரோ அனுமதி வழங்கியுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் (www.isro.gov.in) ஜூன் 28-க்குள் விண்ணப்பித்து அனுமதிச் சீட்டு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.