கடந்த மாதம் இங்கிலாந்தில் இருந்து சுவிட்சர்லாந்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்ய தொடர்பு மூன்று டன் தங்கம் குறித்து சுவிஸ் சுங்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குறித்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளின் சாத்தியமான மீறல்கள் நடந்துள்ளனவா என விசாரிக்கப்படுகிறது.
குறித்த 3.1 டன் தங்கமானது மே மாதம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய இறக்குமதி இதுவென கூறப்படுகிறது.
குறித்த தங்கத்தின் மொத்த மதிப்பு 194 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (202 மில்லியன் டொலர்) என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்டப்படுவதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்ட காரணங்களுக்காக குறித்த ரஷ்ய தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து யார் இறக்குமதி செய்தார்கள் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிட முடியாது என சுங்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான அனைத்து ஐரோப்பிய ஒன்றிய தடைகளையும் நடைமுறையில் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் பொருளாதாரத் தடையின் கீழ் ரஷ்யாவில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மார்ச் 7 முதல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தங்கக் கட்டிகளை சுவிட்சர்லாந்தில் வர்த்தகம் செய்ய முடியாது, ஆனால் அதற்கு முன் உருவாக்கப்பட்டவை வர்த்தகம் செய்யலாம்.
சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 270 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் ($280bn) மதிப்புள்ள தங்கத்தை ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்து இறக்குமதி செய்துள்ளது என்று சுங்க அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஷ்யாவில் இருந்து நகைகள் அல்லது நாணயங்கள் போன்ற தங்கத்தின் மற்ற வடிவங்களுக்கு சுவிட்சர்லாந்தில் வணிகரீதியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.