தருமபுரி: “இன்றைய சூழலில் சாதாரணமாக புழங்கக் கூடிய பொருளாக உள்ள ஸ்மார்ட்போன்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை தான், ஆனால், இவைகளை விட வாழ்க்கைக்கு படிப்பு மிக முக்கியம்” என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்ட நிர்வாகத்துடன் தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 11 நாள் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் புத்தகத் திருவிழா தருமபுரி-சேலம் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அரங்குகளுடன் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
மேலும், 25ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை தினமும் மாலை 6 மணியளவில் மருத்துவர் சிவராமன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் யுகபாரதி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் என தினம் ஒருவர் வீதம் பிரபலங்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி இன்று(24-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று புத்தகக் திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் கூறியதாவது:”இன்றைய சூழலில் சாதாரணமாக புழங்கக் கூடிய பொருளாக உள்ள ஸ்மார்ட் போன்களும், அவற்றைக் கொண்டு இணையத்தின் உதவியுடன் பார்க்கக் கூடிய சமூக வலைத்தளங்கள் போன்றவைகளும் மிகவும் கவர்ச்சிகரமானவைதான். ஆனால், இவைகளை விட வாழ்க்கைக்கு படிப்பு மிக முக்கியம். ஒருவரை மாணவப் பருவத்தில் எளிதாக நல்வழிப் படுத்தி விட முடியும். அவ்வாறு ஒருவரை நல்வழிப்படுத்த படிப்பால் மட்டுமே முடியும். அதற்கு புத்தகங்களும், வாசிப்புப் பழக்கமும் மிக அவசியம். படிப்பறிவு தான் ஒருவருக்கு நல்ல மனநிலையை கொடுக்கும்.
இந்த புத்தகத் திருவிழாவை மக்கள் தங்கள் ஊர் திருவிழா போல கொண்டாட வேண்டும். படிக்கும் சூழலை அனைவரிடமும் உருவாக்கி விட்டால், பிறகு அந்தப் பழக்கம் அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கும்” என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, எம்எல்ஏ-க்கள் வெங்கடேஷ்வரன்(தருமபுரி), ஜிகே மணி(பென்னாகரம்), தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.