வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என, சிறப்பு விசாரணை குழு அறிவித்ததை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி, குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதையடுத்து, குஜராத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.ஆமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த கலவரத்தில், காங்.,கைச் சேர்ந்த, எம்.பி., ஈஷான் ஜாப்ரி உட்பட, 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது, சதி திட்டம் தீட்டியதாக, ஈஷான் ஜாப்ரியின் மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், ‘மோடி உட்பட, 63 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழு அறிவித்தது.
இதை எதிர்த்து, ஜாகியா தொடர்ந்த வழக்கை, குஜராத் உயர் நீதிமன்றம், 2017ல் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, 2018 ல் உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., மாதம் 9 ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Advertisement