சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்கு உயர உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி விமான பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திலிருந்து ஐக்கிய அமீரகம், துபாய், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் உள்பட பலர் விமானங்களில் சென்று வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இருப்பதால் அதிக அளவு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
டாடாவுக்கு போட்டியாக களமிறங்கும் விமான நிறுவனம்: போயிங் விமானத்தை வாங்கி அசத்தல்!
விமான கட்டணம்
இந்த நிலையில் திடீரென சென்னை உள்பட தமிழகத்தில் இருந்தும், தென் இந்தியாவில் இருந்தும் அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணம் திடீரென 2 மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை -அபுதாபி
சென்னை -அபுதாபி, கொச்சி – துபாய், திருவனந்தபுரம் – துபாய் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு கிட்டத்தட்ட இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜூலை முதல் வாரத்தில் இருந்து இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரவேற்பதாக விமான நிறுவனங்களின் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
ஐக்கிய அரபு எமிரேட் பகுதியில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவும், கட்டணம் உயர்வு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரான்சிட் விமான நிலையங்கள்
மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் டிரான்சிட் விமான நிலையங்களாக வளைகுடா நாடுகள் இருப்பதால் வளைகுடா நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் விமானக் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது.
விமானங்கள் குறைவு
இதற்கு முக்கிய காரணமாக தென் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதே என்று கூறப்படுகிறது. சென்னையிலிருந்து துபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தினமும் ஏழு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெறும் 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதும் விமான கட்டணம் உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா
மேலும் இந்தியாவிலிருந்து கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏர் இந்தியாவிடம் மட்டுமே நீண்ட தொலைவில் பறக்கக்கூடிய விமானங்களாக இருப்பதால் ஒரு சில விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி விடுவதாகவும் கூறப்படுகிறது.
சிண்டிகேட்
இது குறித்து விமான நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியபோது ‘விமான நிறுவனங்கள் கட்டண உயர்வு குறித்து வெளிப்படையாக கூற மாட்டார்கள் என்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே சிண்டிகேட் வைத்துக் கொண்டு கட்டணத்தை அதிகரித்து வருகிறார்கள் என்றும் இதற்கு ஒரே தீர்வு அதிக அளவு விமானங்களை இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிக விமானங்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு போதுமான விமானங்கள் இல்லாததே விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த காரணம் என்றும் அதிக அளவு விமானங்களை இயக்கினால் தானாகவே கட்டணம் குறைப்பு வந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Ticket fares From India to Gulf countries doubled: what are the reasons?
Ticket fares From India to Gulf countries doubled: what are the reasons? | திடீரென இருமடங்கு உயர்த்தப்படும் விமானக்கட்டணம்: தமிழக பயணிகள் அதிர்ச்சி!