அதிமுக பொதுக்குழுக் கூட்டம் பெரும் சலசலப்புடன் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. ஓ.பி.எஸ் அவரின் ஆதரவாளர்களுடன் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் ஓ.பி.எஸ் தரப்பிலிருக்கும் வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று மாலை சென்னை, சேத்துப்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஒற்றைத் தலைமை தொடர்பாக முதலில் பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான். ஏற்கெனவே சொல்லிக் கொடுத்ததை பொதுக்குழுவில் அனைவரும் ஒப்பித்தனர். பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும்.
ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் மைக் ஆஃப் செய்யப்பட்டது. அவர்மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை கண்டித்தாரா? இதையெல்லாம் பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிக்க நடைபெற்றிருக்கிறது.
அ.தி.மு.க ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரின் கட்சியல்ல… தொண்டர்களின் கட்சி. செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் பேச அனுமதித்தது தவறு. சில தலைவர்களுக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து கவலை இல்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டது. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும், நிர்வாகிகள் இ.பி.எஸ் பக்கமும் இருப்பதை நான் பார்க்கிறேன்” எனப் பேசினார்.