புதுடெல்லி: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அமிதாப் காந்த்தின் பதவி காலம் வரும் 30ம்தேதியுடன் முடியும் நிலையில், இப்பதவிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் காந்த், வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆரம்ப பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கும். இவருடைய பணியைப் பொறுத்து பணி காலம் நீட்டிக்கப்படும். இதே முறையில் தான் அமிதாப் காந்தின் பணிக்காலமும் நீட்டிக்கப்பட்டது. கடந்த 1981ம் ஆண்டு உபி பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பரமேஸ்வரன், 17 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 2009 ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் 1998ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஐநா.வில் கிராமப்புற குடிநீர் மற்றும் சுகாதார நிபுணராகவும் பணியாற்றி உள்ளார்.