2021 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, தாலிபன்களால் வழிநடத்தப்படும் ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் குறித்து, ஐ.நா பலமுறை ஆப்கானிஸ்தானை எச்சரித்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவும், `பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருகிறது’ என கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “பிராந்தியத்தை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறி வருகிறது.
இஸ்லாமிய அரசு, அல்-கொய்தா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் இங்கு கேட்டுக்கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானிடமிருந்தோ அல்லது அங்குள்ள பயங்கரவாத குழுக்களிடமிருந்தோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித ஆதரவையும் பெறுவதில்லை என்பதை உறுதி செய்ய உரிய முன்னெடுப்புகளைக் காண வேண்டும்” எனக் கூறினார்.
கடந்தவாரம், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் அருகே குருத்வாரா கார்டே பர்வான் மீதான தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எல்-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.