லண்டன் :பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் தலைவரும், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் நெருக்கமானவருமான அமைச்சர் ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். கொரோனா காலத்தில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியது, 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம், வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் ஆளும்கட்சி தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது.
‘தற்போதைய அசாதாரண சூழலில் தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பமில்லை’ என, ஆலிவர் டவ்டன் தன் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியதாவது:இடைத் தேர்தல் தோல்வியை ஜீரணிப்பது கடினம். மக்கள் படும் துன்பங்களை சரிசெய்ய வேண்டும். முக்கியமாக உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதைத் தான் தேர்தல் முடிவு கூறியுள்ளது. இவற்றை முழுவீச்சில் நடத்திக் காட்டுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement