புதுக்கோட்டை சமஸ்தானத்தின், தொண்டைமான் பரம்பரையின் 9 வது மன்னராகத் தனது 6 வது வயதிலேயே பொறுப்பேற்றுக்கொண்டவர் தான் ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபால தொண்டைமான். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரும் இவர் தான். 1922 – ம் ஆண்டு பிறந்த இவர் 1928 – ல் தனது இளம் வயதிலேயே மன்னராக அமர்த்தப்பட்டார். இளம் வயது என்பதால், நிர்வாகத்தைக் கவனிக்க மூவர் கொண்ட நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் நிர்வாகத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 1944 – ல் தனது 22 வது வயதில் சம்ஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ராஜகோபாலத் தொண்டைமான் ஏற்றுக்கொண்டார். மன்னர் மற்றும் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களால் மக்களுக்குப் பல நன்மைகள் நடந்தன. 1946 லிருந்தே இந்தியா சுதந்திரம் அடைவது உறுதியாகிவிட்ட நிலையில், சுதேசி சமஸ்தானங்கள் தனித்து இயங்குவதா அல்லது இந்தியாவுடன் இணைவதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், 1947 – ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதேசி மன்னர்கள் ஆளும் சமஸ்தான பகுதிகள் மக்களாட்சிக்கு மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ஆட்சியின் கீழ் தனித்தே இயங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதற்கிடையேதான், சமஸ்தான நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த இந்திய அரசு விரும்பிய நிலையில், அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அழைப்பிற்கு இணங்க, ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லிக்குச் சென்றார். அங்கு, இந்திய அரசு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தது. சமஸ்தான மக்கள் பலரும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதனைப் புரிந்துகொண்ட இளம் மன்னர், உறவினர்கள், சமஸ்தான உயர் அதிகாரிகள் யாரையும் கலந்துகொள்ளாமல், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்து அதற்குரிய ஆவணங்களிலும் கையெழுத்திட்டு ஊர் திரும்பியிருக்கிறார். அதோடு நகை, பணங்களையும் வழங்கியிருக்கிறார்.
1948 மார்ச் 3 – ம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேல் புதுக்கோட்டையை ஆண்டு வந்த தொண்டைமான் பரம்பரையின் ஆட்சியும் முடிவுற்றது. 1974 – ல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது, 99.99 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பழைமையான கட்டடக் கலையின் கீழ் கட்டப்பட்ட புதிய அரண்மனையைக் குறைந்த தொகைக்கு அரசிடம் வழங்கியிருக்கிறார். அந்த அரண்மனையில், தற்போதைய ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்படி மன்னராகவும், அதன்பிறகு மக்களுக்காகப் பல நற்பணிகளைச் செய்து வந்த ராஜா ராஜ கோபாலத் தொண்டைமான் 1997 – ம் ஆண்டு இறந்தார். குறைந்த விலைக்கு அரசிடம் வழங்கப்பட்ட தற்போதைய ஆட்சியர் அலுவலத்துக்கு ராஜா ராஜகோபால தொண்டைமான் மாளிகை எனப் பெயர் சூட்டியதுடன், அலுவலக வாசலிலேயே ராஜகோபாலத் தொண்டைமானுக்கு முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டது.
2000 – ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைத்தார். இப்படிப் பல சிறப்புகள் வாய்ந்த மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானின் நூற்றாண்டு விழா 23 – ம் தேதி முதல் 26 – ம் தேதிவரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான 23 – ம் தேதி விழா கோலகலமாக தொடங்கியது. விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்லவன்குளம் பகுதியில் அன்னதான விருந்தும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை மாமன்னரின் உருவப்பட ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து, 24 – ம் தேதி மங்கல இசை, டாக்டர் மதுமிதாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. எம்.பி திருச்சி சிவா கண்காட்சியைத் திறந்துவைக்கிறார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே இதில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து, நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து கவியரங்கம் நடக்கிறது. 25 – ம் தேதி காலை, ராக சங்கமம், அதனைத் தொடர்ந்து, சொர்ணமால்யா நாட்டிய அரங்கம் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் கருத்தரங்கத்தில், அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மன்னர் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர். அதைத் தொடர்ந்து, கு. ஞானசம்பந்தன் நடுவராக,
‘தமிழ் மன்னர்களின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் வீரமும் விவேகமுமா? தமிழும் கொடையுமா? ‘என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகிக்கிறார்.
தொடர்ந்து, 26 – ம் தேதி, ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் எம்.பி திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசுகின்றனர். தொடர்ந்து, மன்னர் ஆட்சிக்காலத்தில் வளர்ந்து தற்போது வாழும் மூத்தோர்கள் பலரும் சிறப்பிக்கப்படும் நிகழ்வு நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பாட்டரங்கம் அதோடு, நூற்றாண்டு விழா நிறைவு பெறுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நூற்றாண்டு விழாவிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, 300ஆண்டுகள் பாரம்பர்யம் மிக்க புதுக்கோட்டை மன்னரான ராஜா ராஜகோபாலத் தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் எளிமையையும்,மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில் அவருக்கு நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் விரைவிலேயே அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
மன்னரின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தால், புதுக்கோட்டையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.