புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தலைவர் புகார் தெரிவித்தத அடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த இருகிறார்.
புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது.
தொலைப்பேசியில் முன்பதிவு செய்து அதன் பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போதுதான் நீண்ட மாதங்களுக்கு பிறகு வெளிப்புற சிகிச்சைகள் முழுமையாக செயல்படத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாக குறைபாடுகளால் ஜிப்மர் நிலை மோசமாக உள்ளதாக நோயாளிகள், பணியாளர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதில் உச்சகட்டமாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஜிப்மரின் நடவடிக்கைகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை விசாரித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் முருகனும் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் சங்கத்தினரும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். மருந்து இல்லாத சூழல் தொடங்கி ஜிப்மர் நிர்வாகம் நீண்டகாலமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத சூழல் புதுச்சேரி ஜிப்மரில் நிலவுவதாக சுட்டிகாட்டியுள்ளனர்.
சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் கூறுகையில், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மீது நடவடிக்கை எடுத்து ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஜிப்மர் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடத்துகிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை புதுவைக்கு வருகிறார். ஜிப்மர் பொது சுகாதார பள்ளியை திறந்து வைத்து, ஜிப்மரில் ‘சரியானதை உண்ணுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ஜிப்மர் வளாகத்தை பார்வையிட்டு பேராசிரியர்களோடும், மாணவர்களோடு கலந்துரையாடி விசாரணை நடத்துகிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தனர்.
ஏழை நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவப் பேராசிரியர்கள் தொடங்கி ஆட்சியாளர்கள் வரை அனைவரும் ஜிப்மர் நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்துள்ள சூழலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே நேரடியாக நாளை விசாரணைக்கு வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.