நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை தாக்குவதற்கு திட்டம் தீட்டி இருந்ததாகவும் காவல்துறை உதவியால் ஓபிஎஸ் பத்திரமாக வெளியே வந்ததாகவும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது புகழேந்தி, “23 பொதுக்குழு தீர்மானங்களில் எந்தவித திருத்தமும், வேறு எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 23 தீர்மானமும் நிராகரிக்கப்படுகின்றது என்றால், அதிமுக நிர்வாகிகள் 10 நாட்களாக உட்கார்ந்து எதற்கு இவற்றை தேர்வு செய்தனர். தொடர்ந்து சி.வி.சண்முகத்திற்கு அதிமுகவில் இருப்பவர்கள் பயப்படுகின்றனர். டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழுவில் 43 விதியின் படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 வருடத்திற்கு தொடரலாம்.
இரு பதவிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை யாராலும் மாற்ற முடியாது. எம்ஜிஆர் கொண்டுவந்த பைலாவில் (கட்சி விதிகள்) கை வைத்து தான் இன்று ரோடுரோடாக அலைகின்றனர். அனைத்து பதவிகளும் போய்விட்டது என சிவி சண்முகம் கூறுகிறார் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரும் காலியா?. ஓபிஎஸ் 11 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுவந்து முதல்வராக அமர வைத்தற்காக அவர் மீது தாக்குதல் நடத்தினார்களா? விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி என அறிவித்தாரே அதற்காக அடியா?” என புகழேந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், ”அனைத்தையும் விட்டு கொடுத்த ஓபிஎஸ்க்கு ஒருநாள் செக் வைப்பார்கள் என ஓராண்டுக்கு முன்பே நான் கூறினேன். பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர். டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழுவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி இருக்கின்றனர். அப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றால் சிவி சண்முகத்திற்கு வழங்கப்பட்ட பதவியும் இருக்காது. இதற்கு நீதி மன்றம் செல்வோம்” என தெரிவித்தார்.
அத்துடன், “கூட்டத்தில் வேலுமணி திமுகவை எச்சரிக்கிறேன் என எதற்கு பேசினார்? என தெரியவில்லை. ஊரே சிரிக்கிறது, நேற்று காவல்துறை ஏமாந்து இருந்தால் ஒபிஎஸ், வைத்தியலிங்கம் ஆகியோர் தாக்கப்பட்டு இருப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை இன்று மக்கள் காரி துப்புகிறார்கள். எல்லார் பதவியும் பறிபோக சி.வி சண்முகம்தான் காரணமாக அமைகிறார். நீதிமன்றத்தை அவமானப்படுத்தி இருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் நீதிபதி கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்துள்ளார்கள். ஓபிஎஸ் தரப்பு மீது தாக்குதல் நடத்த பெருமளவு திட்டமிட்டனர். தமிழக முதல்வர், போலீசார் கவனமாக இருந்ததால் தப்பித்துள்ளனர். பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. 11ஆம் தேதி பொதுக்குழு கூடாது” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM