மதுரை: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் நான்காண்டுகால அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும், மதுரை – உத்தரப் பிரதேசம் பிரக்யாநகருக்கு தனியார் ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நகர், புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏராளமானோர் வியாழக்கிழமை ரயில் மறியல் நடத்தத் திட்டமிட்டனர்.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாநகர் மாவட்ட செயலர் கணேசன் உள்ளிட்ட அக்கட்சியினர் கட்டப்பொம்மன் சிலை அருகில் திரண்டனர். பின்னர், சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை ரயில்நிலையம் முன்பாக தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி போலீஸார் தடுத்தனர். ஆனாலும், ஊர்வலமாக வந்தவர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்றதால், அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அப்போது, கட்சி உறுப்பினர் பிச்சை உள்ளிட்ட சிலரால் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை முதன்மைக்காவலர் மணிராஜ் உள்ளிட்ட போலீஸார் தாக்கப்பட்டனர். போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலர் மணிராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி உறுப்பினர் பிச்சை உள்ளிட்டோர் மீதும், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தடையை மீறி மறியலுக்கு முயற்சித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சு.வெங்கடேசன் எம்பி உட்பட 450-க்கும் மேற்பட்டோர் மீதும் மதுரை திலகர் திடல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல, ரயில் நிலையத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றதாக மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுதாய் உள்ளிட்ட 50 பேர் மீது காவல் ஆய்வாளர் சேதுமணி மாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.