மதுரை: மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 3 பேரை கைது செய்து, அவற்றை எங்கிருந்து கடத்தி வந்தனர், எதற்காக அவற்றை கள்ளச்சந்தைகளில் விற்கின்றனர் என்று விசாரிக்கின்றனர்.
மதுரை தெற்குமாசி வீதி சின்னக்கடை தெருவில் உள்ள ஒரு கடை ஒன்றில் விலை உயர்ந்த வாசனை திரவயங்கள் மற்றும் மருந்துபொருட்களை தயாரிக்க பயன்படும் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தினை சிலர் கள்ளச்சந்தையில் விற்க பதுக்கிவைத்திருப்பதாக மதுரை வனஉயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் அந்த கடையை சென்று சோதனை செய்தனர். அவர்கள் அங்கு பதுக்கிவைத்திருந்த 11 கிலோ திமிங்கல எச்சத்தினை பறிமுதல் செய்தனர். இந்த திமிங்கலம் எச்சத்தின் மதிப்பு ரூ.10 கோடி எனக் கூறப்படுகிறது.
திமிங்கல எச்சத்தை பதுக்கிவைத்திருந்த மதுரை மஞ்சணகாரதெரு பகுதியைச் சேர்ந்த ராஜாராம்(36), வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி(36), சிவகங்கை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த கவி(48) ஆகிய 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இந்த திமிங்கல எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, அது எதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது, அது ஏன் இவ்வளவு விலை அதிகம் கொடுத்து வாங்கப்படுகிறது என்பது குறித்தும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். விசாரணை விவரங்களை வனத்துறை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.
மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா கூறுகையில், ”திமிங்கலம் எச்சத்திற்கு கள்ள சந்தைகளில் விலைமதிப்பற்றது. சூழலுக்கு ஏற்ப அதன் விலையை கடத்துவோர் விற்கின்றனர்,” என்றார். வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன் கூறுகையில், ”பதுக்கி வைத்த 3 பேரும் பதுக்கி வைத்த திமிங்கலம் எச்சத்தின் மதிப்பு ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சொல்கிறார்கள். ஆனால், அதன் உண்மையான மதிப்பு என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. இன்னும் விசாரணை முடியவில்லை. முடிந்தபிறகே எதையும் தெளிவாக கூற முடியும்,” என்றார்.
திமிங்கலம் எச்சம் என்றால் என்ன?
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடலில் அலைகளால் கரைத்து அடித்து வரும்போது திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே அம்பர்கிரிஸ் எனும் திரவம் சுரக்கிறது. இந்த திரவம் உருண்டையாக வடிவெடுக்கிறது. இந்த எச்சம் திமிங்கலம் தனது வாயில் இருந்து வாந்தியெடுக்கிறது. இவ்வாறு திமிக்கலம் போடும் எச்சம் அல்லது வாந்திக்கு அம்பர் கிரிஸ் என அழைக்கப்படுகிறது. இதனை நெருப்பினால் சூடு காட்டினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். அதனால், கடலில் உள்ள திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் இந்த திரவமானது கள்ளச்சந்தைகளில் பல்வேறு வாசனை திரவியம் மற்றும் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. அதனால், கள்ளச்சந்தைகளில் கடத்தல்காரர்கள் மத்தியில் திமிங்கலத்தின் திரவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.