வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி-உத்தர பிரதேசத்தில் புண்ணிய நதியில் நீராடியபோது மனைவியின் உதட்டில் முத்தமிட்டவரை சிலர் அடித்து, உதைத்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அயோத்தியில், கங்கைக்கு ஏழு கிளை நதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான சரயு நதியோரத்தில் தான் ராமஜென்ம பூமி உள்ளது. ராமர் கோவிலுக்கு வருவோர், இந்த புண்ணிய நதியான சரயுவில் நீராடிவிட்டு ராமரை தரிசிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று சரயு நதியில் ஏராளமான பக்தர்கள் நீராடிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மனைவிக்கு மிக நெருக்கத்தில் நின்று உதட்டில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த சிலர், ‘ராமஜென்ம பூமியில் இதுபோன்ற அசிங்கத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என கோஷமிட்ட படி கணவரை கரைக்கு இழுத்து வந்து சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
இதைத் தடுக்க மனைவி எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது. இது சம்பந்தமான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அயோத்தி போலீசார் தெரிவித்தனர்.
Advertisement