வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மும்பையில் மின்சார கார் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக, அதை தயாரிக்கும் ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் விசாரணையை துவக்கியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே, மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தன.
இந்நிலையில், ‘நெக்சான்’ என்ற மின்சார கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான, ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, இந்தக் காரை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: நான்கு ஆண்டுகளாக மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதுவரை, 30 ஆயிரம் கார்கள் விற்கப்பட்டுள்ளன. அவை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கி.மீ., பயணம் செய்துள்ளன. இந்நிலையில், எங்கள் நிறுவன கார் முதல் முறையாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆராய விசாரணையை துவக்கிஉள்ளோம்.
எங்களுடைய வாகனங்கள் மற்றும் அதைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். நடந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வந்ததும் அது வெளியிடப்படும். குறைபாடுகள் இருந்தால், அதைக் களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement