மீண்டும் ஒன்று சேர எங்கள் நிபந்தனை இதுதான்: தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். ஒற்றுமையாக இருக்க  வேண்டும். கூட்டு தலைமை வேண்டும் என்பதுதான் எங்கள் அணியின் நிலைப்பாடு என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று பரபரப்பாக நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் இன்று தஞ்சாவூர் வந்தார்.

தஞ்சாவூர் எல்லையை வந்தடைந்த அவருக்கு  அங்கே கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில்  திரண்டு  வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் ‘சால்வைகள்’ அணிவித்து சிறப்பான  வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம், சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கெனவே முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்பட வேண்டும். மற்றவற்றை பற்றி விவாதிக்கலாம். ஆனால் தீர்மானம் எதுவும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதை மீறி இவர்கள் செயல்பட்டதால் இவர்கள் கொண்டு வந்த எல்லா தீர்மானங்களும் செல்லுபடி ஆகாது என கூறியுள்ளார்.

மேலும் கட்சியில் இரண்டாக பிளவு ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் (ஜெயலலிதாவின்) எண்ணப்படி ஆட்சிக்கு வரவேண்டும். ஒற்றுமை  வேண்டும். கூட்டுத் தலைமை வேண்டும். இதுதான் எங்களது எண்ணம்,” அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள்  காலாவதியாகவில்லை. இன்னமும் இருக்கின்றன

பாஜக சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி என்ற முறையில் கலந்து கொள்ளவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். டெல்லி சென்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர்கள் சந்தித்திருக்கின்றனர். “அவர்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் சந்தித்தார்கள்,” என கூறினார்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.