மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருடன் சுமார் 40 சிவசேனா எம்எல்ஏக்களும் 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அசாமின் குவாஹாட்டியில் உள்ள சொகுசு ஓட்டலில் இவர்கள் தங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சிவசேனா எம்எல்ஏக்கள் 24 மணி நேரத்தில் மும்பை திரும்ப வேண்டும். உங்களது அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் நீங்கள் நேரடியாக பேசலாம். கைலாஷ் பாட்டீல், நிதின் தேஷ்முக் ஆகியோர் மும்பை திரும்பியுள்ளனர். 21 எம்எல்ஏக்கள் குவாஹாட்டியில் இருந்து எங்களோடு பேசி வருகின்றனர். அவர்கள் மும்பை திரும்ப விரும்புகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் பண்டார்பூர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பாரத் பால்கே உயிரிழந்ததால் அந்த தொகுதியில் கடந்த 2021-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் சமாதன் அதாடே வெற்றி பெற்றார். இதன்மூலம் பாஜக எம்எல்ஏக்களின் பலம் 106 ஆக உயர்ந்தது. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 13 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவிடம் ஒரு எம்எல்ஏ உள்ளார். ஏக்நாத் ஷிண்டே அணியில் 48 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணிக்கு 168 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்ககூடும்.
தேசியவாத காங்கிரஸிடம் 53, காங்கிரஸிடம் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனாவிடம் தற்போது 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவை சேர்த்து ஆளும் கூட்டணிக்கு 121 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
இந்த சூழலில் சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குவாஹாட்டியில் இருந்து 2 சிவசேனா எம்எல்ஏக்கள் நேற்று மும்பை திரும்பினர். அவர்களையும் சேர்த்து அந்த கட்சிக்கு தற்போது 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியின் பெரும்பான்மை கேள்விக்குறியாகி உள்ளதால் மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி முற்றி வருகிறது.