முல்லைத்தீவில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் – மாணவர் உள்ளிட்டோர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்



முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியரும் மாணவரும் விளக்கமறியலில்

இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் பொலிஸார்  முன்னிலைப்படுத்தியுள்ளனர்.  

இதன் போது, மாணவர் ஒருவர் எதிர்வரும் 30.6.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய ஐந்து மாணவர்களுக்கும் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி பொலிஸார்  மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டுள்ளனர்.

அதன்போது பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோக்கள் இருப்பதை அவதானித்து அதனை சோதித்தபோது அந்த ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழுத்தி, அவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை  பொலிஸார்  விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியதையடுத்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில், ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொலிஸார்  கைது செய்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த வேளை பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த செயல்பாடு தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தி இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் பல்வேறு மாணவிகளை துஷ்பிரயோகம் மேற்கொண்டதோடு பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தியுள்ளதையும் எடுத்துக் கூறி இது பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

முல்லைத்தீவு காவல் நிலையம் சார்பில் கருத்து தெரிவித்த காவல்துறை உத்தியோகத்தர் ஜனன்,

குறித்த விசாரணை தொடர்பிலே ஆசிரியரிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சான்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக தகவல்களை பெற வேண்டிய நிலையில் இவருக்கு பிணை வழங்குகின்ற போது இந்த விசாரணைகளை சரியாக செய்ய முடியாது எனவும் சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதை தெரிவித்து அவரது பிணை விண்ணப்பத்தை நிராகரிக்குமாறும் தெரிவித்தார்.

நீதவானின் உத்தரவு

இந்த சம்பவங்களையும் இந்த சம்பவத்தின் பாரதூர தன்மையையும் நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு கலாச்சார விழுமியங்களோடு இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகி பல மாணவிகள் இவ்வாறு சீரழிவுக்கு உட்படுவதையும் பல மாணவிகள் துன்புறுத்தப்பட்டும், அவர்களுடைய கௌரவங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகள் காரணமாக அவற்றை பொலிஸ்  நிலையங்களிலோ அல்லது நீதிமன்றங்களுக்கும் செல்லாத நிலையில் மறைத்து வைக்கின்ற நிலைமையாலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

இதற்கு முன்னதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டிலே ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் மிக அவதானமாக தங்களுடைய பிள்ளைகளின் செயல்பாடுகளை அவதானிக்குமாறும் இவ்வாறான விசாரணைகளில் அகப்படுகின்ற போது அவற்றை மறைக்காது உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி இவ்வாறான நபர்களை தண்டிப்பதற்கு முன்வர வேண்டும்.

இல்லையெனில் தொடர்ச்சியாக இவ்வாறானவர்கள் பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும் அல்லது சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அந்த பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை சிதைக்கின்ற இந்த செயற்பாடுகள் தொடரும்.

எனவே பிள்ளைகளின் பெற்றோர்கள் இந்த விடயத்தில் மிக அக்கறையோடு பிள்ளைகள் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பாதிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.