சமீபத்தில்தான், உக்ரைன் வீரர்களுக்காக ரஷ்யப் படையினர் வைத்த கண்ணிவெடி வளையத்தை ஆடு ஒன்று சேதப்படுத்த, அந்த வெடிகள் வெடித்ததில் சுமார் 40 ரஷ்ய வீரர்கள் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
தற்போது நடந்துள்ள ஒரு சம்பவத்தைப் பார்க்கும்போது, ரஷ்யாவிற்கு நேரம் சரியில்லையோ என யோசிக்கத் தோன்றுகிறது.
கிழக்கு உக்ரைனிலுள்ள Alchevsk என்ற நகரத்தை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், இன்று அதிகாலை, ரஷ்யப் படைகள் அங்கிருந்து உக்ரைன் விமானம் ஒன்றை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளன.
ஆனால், சிறு பிள்ளைகள் தீபாவளிக்கு ராக்கெட் விடும்போது சில நேரங்களில் சீறிப் புறப்பட்ட ராக்கெட், பட்டாசு வெடித்தவரையே நோக்கித் திரும்ப, பிள்ளைகள் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்களே, அதேபோல, வீசப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று, வானத்தை நோக்கி சென்றுவிட்டு, திடீரென ஏவப்பட்ட இடத்துக்கே திரும்பிவிட்டது.
அந்த ஏவுகணையின் ட்ராக்கிங் சிஸ்டத்தில் கோளாறு இருந்ததால் இப்படி நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏவப்பட்ட ஏவுகணை ஏவியவரையே நோக்கித் திரும்ப, அது விழுந்த இடத்திலிருந்து பெரிய அளவில் வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறும் காட்சிகளைக் காணலாம்.
ஆனால், இந்த சம்பவத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை.