வேல்ஸில் உள்ள டாஃப் ஆற்றில் மூழ்கி மரணமடைந்த 13 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு மொத்த குடும்பமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது.
செவ்வாயன்று கார்டிஃபில் உள்ள டாஃப் ஆற்றில் இந்திய வம்சாவளி சிறுவன் ஆர்யன் கோனியா காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஹெலிகொப்டர் மூலம் விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சிறுவன் ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அவசர மருத்துவ சேவைகளால் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்றும், சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதை உறுதி செய்ததாகவும் தெற்கு வேல்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஜிதேந்திரா மற்றும் ஹினா கோனியாவின் அன்பு மகனும் நவியா கோனியாவின் சகோதரனுமான ஆர்யன் கோனியாவின் இழப்பால் மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்கள் குடியிருந்துவரும் பகுதி மக்களின் ஆதரவு மற்றும் அரவணைப்பால் நெகிழ்ந்து போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அவசர மருத்துவ உதவிக்குழுவினர், உள்ளூர் பொலிசார் ஆகியோரின் உதவியும் மறக்க முடியாது என அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்யன் கணிதம் மற்றும் கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர் எனவும், பழகுவதற்கு இனிமையானவர் எனவும் அவரை இழந்துள்ளது ஆறாத துயரம் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தெற்கு வேல்ஸில் ஒரு மாதத்திற்குள் ஆற்றில் மூழ்கி மரணமடைவது இது இரண்டாவது நபராகும்.
மோரிஸ்டன் பகுதியை சேர்ந்த 13 வயதான கேன் எட்வர்ட்ஸ் ஆற்றில் மூழ்கி மரணமடைந்த நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் மரணம் நிகழ்ந்துள்ளது.
தற்போது ஆர்யன் மரணம் தொடர்பில் உடற்கூராய்வு அலுவலகம் விசாரணை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.