லிங்குசாமியிடம் மன்னிப்பு கேட்ட தெலுங்கு ஹீரோ

சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு தமிழில் ஒரு சிறிய தேக்க நிலை ஏற்பட்டதால் தெலுங்கிற்கு சென்ற இயக்குனர் லிங்குசாமி, அங்குள்ள இளம் ஹீரோ ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளையும் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அப்படி சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் விசில் என்கிற பாடல் மற்றும் படத்தின் டீசர் ஆகியவை வெளியிடப்பட்டன.

இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ ராம் பொத்தினேனி பேசும்போது படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டியும் நன்றி சொல்லியும் பேசியவர், படத்தின் கேப்டனான இயக்குனர் லிங்குசாமியை பற்றி பேச மறந்து போய்விட்டார். இந்த நிகழ்வு சோஷியல் மீடியா மூலமாக பரவி ரசிகர்களிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தான் செய்த தவறை உணர்ந்து கொண்ட ராம் பொத்தினேனி தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக இயக்குனர் லிங்குசாமியிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முக்கியமான மனிதர்.. அவரைப் பற்றி பேசுவதற்கு சுத்தமாக மறந்து போனது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்.. என்னுடைய வாரியர்.. என்னுடைய இயக்குனர் லிங்குசாமி சார்.. இந்த படத்தின் ஒவ்வொரு பிரேமையும் உங்களது தோள்களில் தாங்கி சுமந்துள்ளீர்கள்.. நான் இதுவரை பணியாற்றிய இயக்குனர்களில் மிகச்சிறந்த இயக்குனர்களில் நீங்களும் ஒருவராக இருந்ததற்கு நன்றி. அதேசமயம் மன்னியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது வழக்கமாக பிரபலங்கள் சிலர் மேடையில் பேசும்போது இறுதியாக முக்கியமான நபர்களை குறிப்பிட்டு நன்றியோ வாழ்த்தோ சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து எதேச்சையாக மறந்துவிடும் ஒரு தற்செயல் நிகழ்வுதான் என்று தெலுங்கு திரையுலகில் சேர்ந்த சிலர் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.