வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தினம் கூடுதல் பணி நேரம், வாரத்தில் மூன்று நாள் விடுப்பு உள்ளிட்ட மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம், ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. ஊதியம், சமூக பாதுகாப்பு, பணிச் சூழல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் அடிப்படையிலான தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கடந்த ஆண்டு பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத்திற்கு, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஜூலை 1ல் அமலுக்கு வர உள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இனி நிறுவனங்கள் வாரம், 48 மணி நேர பணி நடைமுறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்களின் பணி நேரத்தை தற்போதைய 8 மணி நேரத்தில் இருந்து 9 – 12 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கேற்ப, வாரத்தில் மூன்று நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும்.தற்போது, தொழிலாளர்களின் அடிப்படை ஊதியப்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் மாத சந்தா செலுத்தப்படுகிறது.
இனி தொழிலாளர்கள் பெறும் மொத்த ஊதியத்தில், 50 சதவீதம் அடிப்படை ஊதியமாக கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப மாத சந்தா செலுத்த வேண்டும்.இதனால் ஊழியர்கள் தரப்பில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் சந்தா அதிகரிக்கும். இதனால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் குறையும். அதே சமயம் ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்தும் மாத சந்தா அதிகரிக்கும். இது, தொழிலாளர்களுக்கு கூடுதல் ஆதாயத்தை வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement