புதுடெல்லி: புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் கூடுதல் வார விடு முறை, அதிகமான பிஎப் தொகை உள்ளிட்ட பல பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது.
தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
அதேபோல் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம்,மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையலாம்.
அதாவது இதன் மூலமாக பிஎப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால் ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓய்வுக்குப்பின் பெறும் பணிக்கொடை அதிகரிக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப்பின் ஊழியர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.
தனது பணிக் காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறுவது போன்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன.
ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.
ஆனால் இந்த விதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம். புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்த புதிய தொழிலாளர் விதி வேலையை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துவதற்கும் உதவும் புரட்சிகரமான நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.