ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள் வரிசையில் 96 படத்திற்கும் நிச்சயம் தனி இடம் உண்டு. அந்தப் படத்தில் நண்பனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் கெளதம். சினிமா பின்புலம் இல்லாத சராசரி நடுத்தர குடும்பத்தில் இருந்து நடிகனாகச் சாதித்துக் காட்டியே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு தொடர்ந்து அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் அவரை நம் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம்.
“என்னை தனித்துவமா காட்டினதே என்கிட்ட இருக்கிற பலகுரல் திறமைதான்! என்னோட அப்பா மூலமாகத்தான் மிமிக்ரின்னா என்னன்னே எனக்கு தெரிய வந்துச்சு. வீட்ல நடிகர்கள் பேசுறதை கவனிச்சு நானாகவே பேசி பார்ப்பேன். அப்படித்தான் ஒவ்வொரு வாய்ஸூம் பிராக்டீஸ் பண்ணினேன். விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்துச்சு. அந்த சமயம் நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். 15 வயதிற்கு உட்பட்ட பசங்கதான் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக்க முடியும். நான் பெரிய பையன்னு தெரியும், ஆனாலும் சும்மா டிரை பண்ணி பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன். அங்க நான் நல்லா பண்றேன்னு சொல்லி சில எபிசோட் கெஸ்ட் மாதிரி பர்ஃபார்ம் பண்ண வாய்ப்பு கொடுத்தாங்க. அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்க நினைச்சேன். அதே மாதிரி அதில் என் பர்ஃபார்மென்ஸை பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க.
மிமிக்ரி மூலமாகத்தான் 96 பட வாய்ப்பே எனக்குக் கிடைச்சது. ஆடிஷனில் அவங்க பேச சொன்ன டயலாக்கை மிமிக்ரி பண்ணிதான் பர்ஃபார்ம் பண்ணினேன். அது பிடிச்சுப் போய்தான் என்னை செலக்ட் பண்ணினாங்க. அந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அந்தப் படத்துடைய இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்” என்றவரிடம் 96 இரண்டாம் பாகம் குறித்து கேட்டதற்கு, “இயக்குநர்கிட்ட பேசும்போது அவர் 96 இரண்டாம் பாகத்திற்காக திரைக்கதை வச்சிருக்கிறதாகச் சொன்னார். நிச்சயம் அதற்கான வாய்ப்பு இருக்கு” என்றவர் தொடர்ந்து பேசினார்.
“பல முறை எனக்கான அங்கீகாரம் கிடைக்கலைன்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். திறமை இருந்தும் பலருக்கும் நான் தெரிய வரலையோ என்கிற வருத்தமும் இருக்கு. தொடர்ந்து வாய்ப்பு தேடுறேன். முயற்சி பண்ணி கிடைக்கலைன்னா அது வேற… ஆனா, முயற்சி பண்ண கூட வாய்ப்பு வரலைங்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு. ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து போகும்போது என்னை நானே தேற்றிப்பேன்!
பொருளாதார சூழலில் நாங்க கஷ்டத்தில்தான் இருக்கிறோம். ஆனாலும் என் அப்பா என்னைக்குமே என்னை வேலைக்கு போகச் சொன்னதில்லை. சிவாஜி ஐயா இருந்த துறையில் நீயும் தடம் பதிச்சிருக்க… அதுல கவனம் செலுத்து! இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லுவார். அவர் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டாலும் வீட்டுக்கு என்னால எதுவும் பண்ண முடியலைங்கிற வருத்தம் நிறையவே இருக்கு!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்தும், பல குரல்களில் தொடர்ந்து பேசியும் அசத்தினார். அந்த வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும்!