50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களிடம் உள்ளனர்: கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது

மும்பை: எங்களிடம் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில் 12 எம்எல்ஏக்கள் மீது மட்டும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது சட்ட விரோதம். முதல்வரின் இந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் முக்கியம்’’ என்று ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணியில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலர் உள்ளனர்.கடந்த 20ம் தேதி இம்மாநிலத்தில் சட்ட மேலவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிந்ததும், அன்று இரவே சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் மற்றும் 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்று, அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கினர். பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்று, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி, தேர்தல் முடிவுகள் வெளியானதும், கூட்டணியை முறித்துக் கொண்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா ஆட்சியை கைப்பற்றியது.இது பொருந்தாக் கூட்டணி என்றும், காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் சிவசேனா கட்சி, அடிப்படை கொள்கையான இந்துத்வா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி செல்கிறது. எனவே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும்’’ என்று ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நிபந்தனை விதித்தார்.முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார். ராஜினாமா கடிதத்தை பாக்கெட்டிலேயே வைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு பின்னர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்தான் முதல்வராக இருக்க வேண்டும்’’ என்று உத்தவ் தாக்கரே கூறினார். மேலும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் உத்தவ் தாக்கரேவின் இந்த வேண்டுகோளை ஏக்நாத் ஷிண்டே நிராகரித்து விட்டார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த மேலும் சில எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து விட்டனர். தற்போது சிவசேனா கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள், ஷிண்டே வசம் உள்ளனர். அக்கட்சியின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையே 55 தான். மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று மாலை சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் 18 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உத்தவ் தாக்கரேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களில் 12 பேர் மீது மட்டும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, உத்தவ் தாக்கரே ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக நேற்று மாலை ஏக்நாத் ஷிண்டே கவுஹாத்தியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உத்தவ் தாக்கரேவின் இந்த மிரட்டல் எடுபடாது. எங்களிடம் எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் எங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக, தேசிய கட்சி ஒன்று எங்களிடம் உறுதியளித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.‘அந்த தேசிய கட்சி எது என்பது, எல்லோருக்கும் தெரியும்’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.இன்று காலை மீண்டும் செய்தியாளர்களிடம் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘‘எங்கள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தவிர இதுவரை ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 9 பேர் எங்களுடன் உள்ளனர். இந்த நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் மீது மட்டும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது சட்ட விரோதம். முதல்வரின் இந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் முக்கியம்’’ என்று காட்டமாக கூறினார்.மேலும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம், இன்று மகாராஷ்டிரா ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. அதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு, ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.