‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்கும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ (BB ஜோடிகள்) டான்ஸ் ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
தாமரை – பார்த்தசாரதி, சுஜா வருணி – சிவக்குமார், ஆர்த்தி – கணேஷ் என் ரியல் ஜோடிகளும், வேல்முருகன் – இசைவாணி, ஐக்கி பெரி – தேவ், அபிஷேக் – சுருதி என ரீல் ஜோடிகளும் கலந்து கொண்டு தங்களது நடனத் திறமைகளைக் காட்டி வர விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது நிகழ்ச்சி.
நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் எவிக்ஷன் தொடங்கி முதல் ஜோடியாக டேனி – என்.எஸ்.கே.ரம்யா வெளியேறினார்கள்.
தற்போது இரண்டாவது எவிக்ஷன் நடந்து முடிந்துள்ளது. சில தினங்களுக்கு முன் நடந்த இதற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஜோடிகளில் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் – இசைவாணி ஜோடி எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளது.
இது குறித்து வேல்முருகனிடம் பேசினோம்.
“‘பிக் பாஸ் ஜோடிகள்’னு சொல்லிக் கூப்பிட்டதுமே, ‘எப்படியும் முதல் ரெண்டு வாரத்துல வெளியில அனுப்பிடப் போறீங்க’ன்னு அவங்களிடமே நேரடியா சொன்னேன். அது இப்ப நடந்திடுச்சு, அவ்ளோதான். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலயும் சரி, இப்ப இந்த நிகழ்ச்சியிலயும் சரி, ஒரு என்டர்டெய்ன்மென்ட்டுக்காகக் என்னைக் கூப்பிட்டிருக்காங்க! ஆனா நான் எப்பவும் எதையுமே சீரியஸா எடுத்துக்கிறதில்லைங்க. அது என் சுபாவம். இந்த ரெண்டு அனுபவத்தையுமே எனக்குக் கிடைச்ச வாய்ப்பா பார்த்தேன். அதுல என்ன செய்ய முடியுமே அதை முழு ஈடுபாட்டுடன் செஞ்சிருக்கேன்.
இந்த நிகழ்ச்சி கூட பாடகரான என்னை ஆட வச்சது இல்லையா? அந்தக் கோணத்துல நமக்குச் சாதகமா எடுத்துக்க வேண்டியதுதான்” என்கிறார்.
வேல்முருகன் வெளியேறிய எபிசோடு அடுத்த வாரம் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது.