எனக்குத் திருமணமாகி 9 மாதங்கள் ஆகின்றன. ரெகுலராக ஜிம் சென்று வொர்க் அவுட் செய்வது என் வழக்கம். அடுத்து குழந்தைக்குத் திட்டமிடுவதால் ஜிம் செல்வதை நிறுத்தச் சொல்கிறார்கள் வீட்டில். வொர்க் அவுட் செய்வது கருத்தரிப்பதை பாதிக்குமா? குழந்தை பெறும் திட்டத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாம்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
திருமணமாகி 9 மாதங்கள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்னும் கருத்தரிக்காத நிலையில் நீங்கள் வொர்க் அவுட் செய்வதைத் தொடர்வது ஆரோக்கியமானது.
ஒருவேளை நீங்கள் கருத்தரித்துவிட்டால் முதல் ட்ரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு உங்களை வொர்க் அவுட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துவார்கள். முதல் மூன்று மாதங்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியவை என்பதுதான் காரணம்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் யோகா மற்றும் மிதமான பயிற்சிகளைச் செய்யலாம். அதனால் உங்கள் முதுகுப்பகுதி பலம்பெறும். குறிப்பிட்ட சில பயிற்சிகளைச் செய்வதால் பிரசவமும் சிக்கலின்றி நிகழும் வாய்ப்புகள் அதிகம்.
குழந்தை உண்டாகும்வரை உடற்பயிற்சிகளைத் தொடர்வதால் நீங்கள் ஆரோக்கியமாக மாறுவதுடன், எடையையும் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். எப்போதும்போல உடற்பயிற்சிகளைத் தொடர்ந்துவிட்டு, கருத்தரித்ததும் மூன்று மாதங்களுக்கு நிறுத்திவிடுங்கள்.
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கவென சிறப்புப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய உடல்நலம், கர்ப்பத்திலுள்ள ரிஸ்க், வயது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்த்துவிட்டு, உங்களுக்கான பயிற்சிகளை அவர்கள் கற்றுத் தருவார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் குழந்தை உண்டாவதற்கும் வொர்க் அவுட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்வதானால் முறையாக உடற்பயிற்சிகள் செய்வோர் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். அப்படி ஆக்டிவ்வாக இருப்போருக்கு, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஸ்ட்ரெஸ் இல்லாமலிருக்கவும் வொர்க் அவுட்தான் பரிந்துரைக்கப்படும். எனவே, வொர்க் அவுட் செய்து உங்களை உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்த வகையில் வொர்க் அவுட் என்பது உங்களுக்கு நல்லதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.