மதுரையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பிரபல பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மதுரை மாநகர் சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணை சந்திப்பில் சாலையோரத்தில் அமைந்துள்ள பிரபலமான மதுரை பன் பரோட்டோ கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் பெட்டிக்கடைக்கான அனுமதியை பெற்ற நிலையில், சாலையை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்தி வந்ததாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் சென்று வரக்கூடிய போக்குவரத்து சந்திப்பு அருகேயுள்ள சாலையோரத்தில் இந்த கடை செயல்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாலையோரமாக அமைந்துள்ள பிரபல மதுரை பன் புரோட்டோ கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பரோட்டா உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவை விற்பனை செய்ததாக கடைக்கு சீல் வைத்து நோட்டீஸ் அளித்தனர். தொடர்ந்து தடையை மீறி விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துசென்றனர்.
மதுரையில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த பிரபல பன் புரோட்டா கடையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்காணோர் உண்டுவந்த நிலையில் அங்கு தயாரிக்கப்பட்ட புரோட்டோ உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறி உணவுபாதுகாப்புத்துறை சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : மணிகண்டபிரபு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM