ஆச்சார்யா அவஸ்தையால் சிரஞ்சீவி உஷார் நடவடிக்கை
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சி வந்த நடிகர் சிரஞ்சீவி ஒரு குறிப்பிட்ட காலத்தில் அரசியலிலும் நுழைந்ததால் அதற்காக சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனால் அரசியல் சரிவராத நிலையில் மீண்டும் பழையபடி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அந்தவகையில் தற்போது மலையாள லூசிபர் படத்தின் ரீமேக்காக உருவாகும் காட்பாதர், தமிழில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலோ சங்கர் மற்றும் சிரஞ்சீவி 154 ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.
இதில் காட்பாதர், போலோ சங்கர் ஆகிய படங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வரும் சிரஞ்சீவியின் 154வது படம் தான் முதலில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை பாபி (கே.எஸ்.ரவீந்திரா) என்பவர் இயக்கி வருகிறார்.. ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் 2023 சங்கராந்தி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இணைந்து நடித்து வெளியான ஆச்சார்யா திரைப்படம் கடந்த வருட இறுதியில் இருந்து இந்த வருடம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை கிட்டத்தட்ட நான்கு முறைக்கு மேல் ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு காரணம் ஒவ்வொரு பண்டிகைககளிலும் இளம் முன்னணி நடிகர்களின் படங்களும் ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப்-2 போன்ற பான் இந்தியா படங்களும் தங்களது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்தது தான் இதற்கு காரணம்.. இதனால் ஆச்சார்யா படத்திற்கு ஏற்பட்டதுபோல இந்த படத்திற்கு ரிலீஸ் தேதிக்காக அலைக்கழியகூடாது என்பதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே உஷாராக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.