ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் திட்டம்’: தஞ்சை விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ள ஓய்வூதியம் இல்லாத, ஒப்பந்த முறையில் இராணுவத்திற்கான ஆள் எடுக்கும் திட்டமான ‘அக்னி பாத்’ திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அகில இந்திய அறைகூவலை ஏற்று தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒருங்கிணைப்பாளர் வீர மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் தொடக்கி வைத்து பேசினார். ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை கூலிப்படையாக, ஆர்எஸ்எஸ் மயமாக்கும் அபாயம் உள்ளது. எனவே சமுதாயத்தை சீரழிக்கும் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறைகளில் 50 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்பணிகளில் தேவைக்கேற்ப காண்ட்ராக்ட் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இராணுவத்தையும் சீர்குலைத்து, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இராணுவத்தை ஒப்பந்தமயமாக்கும் காண்ட்ராக்ட் முறை திட்டத்தை மோடி அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணை செயலாளர் ராவணன், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பி.முத்துக்குமரன், சிபிஐஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆர்ப்பாட்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.