`ஆர்டர்லி' காவலர்கள் – நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு விடிவு காலம் பிறக்குமா?

காவல்துறையில் ஆர்டர்லி என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்தக்காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளை பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பிற்காலத்தில் ஆர்டர்லிகளாக பணியாற்றிய காவலர்கள், அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இது காலம், காலமாக காவல்துறையில் நடந்துவரும் செயலாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆர்டர்லி காவலர்கள், உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பயந்து வேறுவழியின்றி ஆர்டர்லி பணிகளை காவலர்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

போலீஸ்

ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏற்கெனவே வந்துள்ளன. ஆர்டர்லி நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஏனோ, காவல்துறையில் ஆர்டர்லி முறை தொடர்வது வேதனைக்குரியது. தமிழக காவல்துறையில் முன்னாள், இன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்டர்லியாக உள்ளனர். இதில் சிலர் விருப்பப்பட்டு இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் பலர், நிர்ப்பந்தத்தின் காரணமாக ஆர்டர்லிகளாக உள்ளனர். காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளுக்கு அரசு சம்பளம். ஆகமொத்தத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்காத வேலைக்காரர்களாக ஆர்டர்லி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் தமிழக காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை எதிர்த்து கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த போதுதான் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லி காவலர்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த, வழக்கு கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, ”ஆர்டர்லி முறை தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு, உள்துறைச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர் அதிகாரிகளுடன், முதல்வரும் ஆலோசனை நடத்தி உள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், போலீஸ் பணி என்ற கனவில் பயிற்சி முடித்து, மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்களை, அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வதற்காக, ஆர்டர்லிகளாக பயன்படுத்துவது, சட்டப்படி குற்றம். ஆர்டர்லி வைத்திருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும்.
அரசியல்வாதிகளும், போலீஸாரும் கூட்டு சேர்ந்து இயங்கினால், அது அழிவுக்கு வழிவகுக்கும். போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கருப்பு ஸ்டிக்கரை அகற்றாமல் இருப்பதை, என்னவென்று கூறுவது? என்று கூறியதோடு, வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

நீதிமன்றத்தின் இந்த அதிரடிக்குப்பிறகு தமிழக காவல் துறையில் எந்தெந்த அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக யார், யார் பணியாற்றுகிறார்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில ஐபிஎஸ் அதிகாரிகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் ஆர்டர்லிகளாக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்த வழக்கு விசாரணைக்கு முன், ஆர்டர்லிகளாக பணியாற்றும் காவலர்களை பணிக்கு திரும்பவும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

போலீஸ்

இதுகுறித்து மனஉளைச்சலுக்குள்ளான ஆர்டர்லி காவலர்கள் சிலரிடம் பேசினோம், “தமிழக காவல்துறையில் ஆர்டர்லிகளின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து விட்டது. முதல்நிலைக்காவலர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை ஆர்டர்லி பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு வேலை நேரம் என கிடையாது. யூனிபார்ம் அணியவேண்டியதில்லை. காவல் நிலையங்களிலிருந்து (உயரதிகாரிகளின் உத்தரவுப்படி) வரும் உத்தரவின்படி அதிகாரிகளின் வீடுகளில் சொல்லப்படும் வேலைகளை செய்து கொடுத்தால் போதும். அதிகாரிகளுக்கு விசுவாசமாக இருக்கும்போது சில காரியங்களையும் சில ஆர்டர்லி காவலர்கள் செய்து கொள்கின்றனர். அத்தகையவர்கள்தான் ஆர்டர்லி காவலர்களாக பணியாற்ற விரும்புவார்கள். அதே நேரத்தில் காவல்துறைக்கு புதிதாக வேலைக்கு வருபவர்கள் (பட்டதாரிகள்) ஆர்டர்லியாக பணியாற்ற விரும்புவதில்லை. இன்னும் சில அதிகாரிகளில் வீடுகளில் மனித உரிமை மீறல் செயல்கள் நடக்கும்போதுதான் ஆர்டர்லி காவலர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். காவல்துறை பணி என்பது அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். அதனால், அதிகாரிகள் என்ன வேலை செய்ய சொல்கிறார்களோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் காவல் பணியில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். தற்போது ஆர்டர்லி காவலர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீட்டுள்ளதால் விடிவு காலம் பிறக்கும் என நம்புகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.