லண்டன்: இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் 42 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தி லான்சென்ட் மருத்துவ இதழ் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. கொரோனா இறப்புகள் தொடர்பாக, தி லான்செட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:அதிகப்படியான கொரோனா இறப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் உலகளவில் நிகழ வேண்டிய சாத்தியமான 3.14 கோடி கொரோனா மரணங்களில் 1.98 கோடி இறப்புகள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், டிசம்பர் 8, 2020ம் ஆண்டில் தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியதில் இருந்து டிசம்பர் 8, 2021ம் ஆண்டு வரையிலான இறப்பு எண்ணிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் (66 சதவீதம்) ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்த காலகட்டத்தில் தடுப்பூசி மூலம் 42.10 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை காட்டுகிறது. டெல்டா வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் பரவிய போதிலும், தடுப்பூசிகள் தான் பல லட்சம் உயிர்களை காப்பாற்றி உள்ளன. ஏழை நாடுகளும் தடுப்பூசியை பெற வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் பல பின்தங்கிய நாடுகளும் தடுப்பூசியை பெற்றதன் மூலம் 75 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 196.44 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.