ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், ஜிஎஸ்டி நஷ்டயீடு கூடுதல் வரி 2026 ஆம் வருடம் மார்ச் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியுடன் “ஜி.எஸ்.டி காம்பன்னேஷன்” செஸ் என அழைக்கப்படும் இந்த கூடுதல் வரி ரத்து செய்யப்படும் என நிர்ணயிக்கப்பட்ட இருந்த நிலையில், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், மார்ச் 2026 வரை கூடுதல் வரி வசூலிப்பு தொடரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மத்திய அரசு 86,912 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நஷ்டஈடு தொகையை மாநில அரசுகளுக்கு அளித்தது.
ஜிஎஸ்டி நஷ்டஈடு கூடுதல் வரியை மார்ச் 2026 வரை அமல்படுத்த ஏற்கனவே ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதன்படியே இந்த வரி மேலும் நான்கு ஆண்டுகளுக்கு வசூலிக்கப்படும் என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்திருந்தார். இந்த முடிவை அமல்படுத்தும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிகரெட், சுருட்டு, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்; மோட்டார் வாகனங்கள், குளிர்பானங்கள் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது ஜிஎஸ்டி நஷ்ட ஈடு கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. சில புகையிலை பொருட்கள் மீது 290 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரிவதிப்பு முறை அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு வருடமும் 14 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் அப்படி அதிகரிக்கா விட்டால் நஷ்டஈடு அளிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2017ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் 2022ஆம் வருடம் ஜூன் மாதம் வரை ஜிஎஸ்டி நஷ்டயீடு கூடுதல் வரி வசூலிக்கப்படும் எனவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
ஜிஎஸ்டி நஷ்டயீடு செஸ் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையிலிருந்து மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் நிர்ணயித்ததை விட குறைவாக வரி பஙகு கிடைத்த மாநிலங்களுக்கு நஷ்டஈடு அளித்து வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பெருஞ்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாக, ஜிஎஸ்டி வரி வசூல் பெருமளவு சரிந்தது. ஆகவே மாநிலங்களுக்கு அளிக்கவண்டிய நஷ்ட ஈடு தொகை கணிசமாக உயர்ந்தது. நஷ்டஈடு செஸ் வசூல் மூலம் மாநிலங்களுக்கு நஷ்டஈடு அளிக்க முடியாத சூழலில், மத்திய அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மாநில அரசுகளுக்கு நஷ்டஈடு அளித்துள்ளது.
இதையும் படிங்க… கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள் – கர்நாடகாவில் அதிர்ச்சி
2020ஆம் வருடத்திற்கான 1.59 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2021ஆம் வருடத்திறகான 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று நஷ்ட ஈடு வழங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் மற்றும் இதற்கான வட்டியை திரும்ப செலுத்த ஜிஎஸ்டி நஷ்ட ஈடு செஸ் வசூல் 2020 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். நஷ்டஈடு மேலும் சில வருடங்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் எனவும் பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அடுத்த வாரம் சண்டிகர் நகரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் நஷ்ட ஈடு தொடர்பான விவகாரங்கள் மற்றும் கைத்தறி ஜவுளி உள்ளிட்ட 113 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர். —
– செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM