அதிமுகவில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற குரல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் அந்த ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக முழு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததால், பொதுக்குழு மொத்தமும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவைத்தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன், அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்நிலையில், திண்டுக்கல் நகரில் இன்று ‘மாயத்தேவர் அதிமுக’ என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில்,
“இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்கதான்.
தேவர் இனத்தின் முதல் வெற்றிவீரன்
சின்னாளப்பட்டி மாயத்தேவர்
அதிமுக நாங்கதான்
எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம்
எவனுக்கும் அஞ்சமாட்டோம்
இப்படிக்கு மாநில இளைஞர் பாசறை திண்டுக்கல் மாவட்டம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஓபிஎஸ், மாயத்தேவர் புகைப்படம் மற்றும் நிர்வாகி ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது
‘சின்னாளப்பட்டி மாயத்தேவர்’ என்பவர் யார்? அவருக்கும் இரட்டை இலை சின்னத்திற்கும் என்ன சம்பந்தம்? என்பது குறித்து வெளியான தகவலின் அடிப்படையில்,
எம்.ஜி.ஆர். அதிமுகவை 1972 ஆம் ஆண்டு உருவாக்கிய உடன், திண்டுக்கல்லில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவர் என்பவரை நிறுத்தினார்.
அப்போது அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று மாபெரும் வெற்றியாய் பெற்றார். அதுமுதல் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் வெற்றி சின்னமாக மாறியது.
இதன் காரணமாகவே, அதிமுகவின் வெற்றி சின்னத்தை பெற்றுத் தந்தவர் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மாயத்தேவர் என்று சொல்லப்படுகிறது. அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.