லாகூர்-மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சஜித் மஜீத் மிர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துஉள்ளது.
மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 167 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஜித் மஜீத்தை கைது செய்யும்படி பாக்.,கை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால், சஜித் மஜீத் இறந்து விட்டதாக பாக்., கூறி வந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரலில் சஜித் மஜீத்தை பாக்., கைது செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் சஜீத் மஜீத்திற்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாக்., தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளது.இதுவரை இறந்ததாக கூறி வந்த பயங்கரவாதியை நீதிமன்றத்தில் நிறுத்தி பாக்., தண்டனை வாங்கித் தந்திருப்பதன் பின்னணியில் பிரான்சை சேர்ந்த, எப். ஏ.டி.எப்., எனப்படும் நிதிமுறைகேடு நடவடிக்கை குழு உள்ளது.
உலகளவில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை, எப்.ஏ.டி.எப்., பழுப்பு அல்லது கருப்பு பட்டியலில் சேர்த்து விடும். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச நிதி அமைப்புகள் கடனுதவி வழங்காது. இதன்படி பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பாக்.,கை எப்.ஏ.டி.எப்., பழுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதனால் பாக்.,கிற்கு சர்வதேச நிதியுதவி கிடைப்பது கடினமாகியுள்ளது. இதையடுத்து எப்.ஏ. டி.எப்., தெரிவித்த நிபந்தனைகளை பின்பற்றி, பாக்., பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜகியுர் ரகுமான் லக்வி, ஜமாத் – உத் – தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாக்., இதுவரை இறந்ததாக கூறி வந்த சஜித் மஜீத் மிர்ரை கைது செய்து சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்., எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, எப்.ஏ.டி.எப்., அதிகாரிகள் இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.
இதையொட்டி, சஜித் மஜீத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாக்., தற்போது தெரிவித்துள்ளது. பாக்., எடுத்துள்ள நடவடிக்கைகளில் எப்.ஏ.டி.எப்., அதிகாரிகள் திருப்தி அடைந்தால் அந்நாட்டை பழுப்பு பட்டியலில் இருந்து நீக்குவர்.