உக்ரைனில் கொல்லப்பட்ட தங்கள் தோழியின் முன்னாள் கணவரின் உடலையும், அவரிடமிருந்த ஐந்து ஏவுகணைகளையும் மீட்பதற்காக, பிரித்தானியர் தலைமையிலான தன்னார்வலர்கள் குழு துணிச்சலான ஒரு ஆபரேஷனை செய்துகாட்டி சாதித்துள்ளது.
பிரித்தானியரான டேனியல் (Daniel Burke, 35) என்னும் முன்னாள் துணை இராணுவ வீரர் மற்றும் சில தன்னார்வலர்கள் கொண்ட ஒரு குழுவிடம், ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள Kherson மாகாணத்தில் கொல்லப்பட்ட ஒரு உக்ரைன் தரப்பு வீரரின் உடலை மீட்டுக் கொண்டு வரும் ஆபத்தான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த வீரர் இந்த குழுவில் உள்ள வீரர் ஒருவரின் தோழியின் முன்னாள் கணவர். மட்டுமின்றி, அவர் பயணித்த வேனில் ஐந்து ஏவுகணைகளும் இருந்துள்ளன.
ரஷ்யப் படைவீரர்கள் கண்கொத்திப் பாம்பாய் யாராவது அந்த உடலை எடுக்க வருவார்கள், அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என காத்திருக்க, அவர்கள் கண்ணில் படாமல் அந்த வீரரின் உடலையும் அவரிடம் இருக்கும் ஏவுகணைகளையும் மீட்டு வருவது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்ற நிலையிலும், துணிச்சலாக அதை செய்து முடிக்க களமிறங்கியிருக்கிறார்கள் மான்செஸ்டரைச் சேர்ந்த டேனியல் தலைமையிலான தன்னார்வலர்கள்.
உக்ரைன் நிபுணர் ஒருவர் டேனியல் குழுவினரை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு பாதுகாப்பாக விட்டுவர, உயரமான ஒரு இடத்திலிருந்து பார்க்கும்போது, அந்த வீரரின் உடலும், அவரது வேனும் கீழே ஓரிடத்தில் இருப்பதைக் கவனித்துள்ளார்கள் டேனியல் குழுவினர்.
கீழே இறங்கினால் ரஷ்யப் படையினர் சுட்டு விடுவார்கள், என்ன செய்வது?
உடனே, அமெரிக்கா கொடுத்த ஒரு கையில் சுமக்கும் ராக்கெட் லாஞ்சர் உதவியுடன் கீழே நின்ற ஒரு ரஷ்யப் போர் வாகனத்தைக் குறிவைத்து சுட்டிருக்கிறார் டேனியல் குழுவைச் சேர்ந்த ஒருவர். அங்கே ஏற்பட்ட குழப்பத்தைக் கவனிக்க ரஷ்யர்களின் கவனம் திசை திரும்ப, அதற்குள் உயிரைப் பணயம் வைத்துக் கீழே இறங்கிய தன்னார்வலர்கள், இறந்த வீரரின் உடலையும் ஏவுகணைகளையும் எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி வந்திருக்கிறார்கள்.
டேனியல் குழுவின் வீரச் செயலை வெகுவாகப் பாராட்டியுள்ள 700 வீரர்களின் தலைவரான உக்ரைன் பட்டாள தளபதியான மேஜர் வாடிம் என்பவர், அவர்களது துணிச்சல் தன் வீரர்களுக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.