மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயுடன் சேர்ந்துள்ளனர். அவர்கள் பாஜக-வுடன் சேர்ந்து கொண்டு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அவர்களில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 பேர் கட்சி தலைமை கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறி அவர்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று துணை சபாநாயகர் நர்ஹரியிடம் சிவசேனா கேட்டுக்கொண்டது. அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் 16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேட்டு, துணை சபாநாயகர் 16 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அந்த நோட்டீஸுக்கு 16 பேரும் திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் பதவியை பறித்துவிட்டால் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதே வீணாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நோட்டீஸ் சட்டவிரோதமானது என்றும், சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாவிட்டால் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், எங்களுக்கும் சட்டம் தெரியும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார். துணை சபாநாயகரின் நோட்டீஸால் 16 எம்.எல்.ஏ.க்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. துணை சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சிவசேனாவின் செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரேயிக்கு அதிகாரம் வழங்கி முடிவு செய்யப்பட்டது. அதோடு பால் தாக்கரே பெயர் மற்றும் சிவசேனா பெயர்களை மற்றவர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனில் மனுக்கொடுக்கவும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பால் தாக்கரே பெயரை அல்லது சிவசேனா பெயரை மற்றவர்கள் பயன்படுத்தினால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர் . ஏக்நாத் ஷிண்டேயும் அவரின் ஆதரவாளர்களும் புதிய கட்சி தொடங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் சிவசேனா பெயரை அல்லது பால் தாக்கரே படத்தை பயன்படுத்தகூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.