எல்லா நேரங்களிலும் நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவுவது உணவு. உணவு என்றவுடன் அனைவருக்கும் நினைவு வருவது சைவம் அசைவம் என்றெல்லாம் இருந்த நிலை மாறி. இப்போது எல்லாம் துரித உணவு. சைனீஸ் உணவு. என்று எல்லாம் மாறிவிட்டது. எந்த உணவாக இருந்தாலும் பரிமாறுவதற்கு என்று ஒருவர் தேவை இல்லையா? அப்படி உணவு பரிமாறுகிறவர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதைதான் இப்போது பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள உணவகங்களில் ஒவ்வொருவிதமாக பரிமாறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பரிமாறுகிறவர்கள் அன்போடு பரிமாறுவது என்பது இயற்கையாகவே அவர்களுக்குள் இருக்கும் அம்சமாகி விடுகிறது. அப்படி அன்போடு இயற்கையாகவே உணவு பரிமாறும் ஒருவரின் வாழ்க்கை தான் இது.
என் பேரு சிவகுமார்ங்க. செஞ்சி பக்கத்துல தான் எங்க ஊரு. பத்தாவது வரைக்கும் படிச்சேன் பத்தாவது பெயிலாகிட்டேன் அதுக்கு மேல படிப்பு வரல. நாங்க உடன் பிறந்தவங்க மூணு பேரு ஒரு அக்கா ஒரு அண்ணன். அப்பா ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்வார். அவரை நம்பி நாம் இருக்கக்கூடாதுன்னு இங்க வந்துட்டேன். இது எங்க அக்கா வீட்டுக்காரருடைய ஹோட்டல். மூணு வருஷத்துக்கு மேல இங்க வேலை செய்கிறேன். எனக்கு தினமும் 500 ரூபாய் கூலி. காலையில 9 மணிக்கு வேலைக்கு வந்தா, ராத்திரி 9 மணி வரைக்கும் வேலை இருக்கும். பறிமாறுகிற வேலை மட்டுமில்லாமல் எல்லா வேலையும் செய்வேன். காலையில் வந்ததும் இலையை நறுக்கி வைக்கிறதிலிருந்து காய்கறி நறுக்க உதவுவதும் சமையல் வேலைக்கு உதவர வரைக்கும் எல்லா வேலையும் செய்வேன். காலையில ஒன்பது மணிக்கு எல்லாம் சாப்பிட ஆளுங்க வந்துடுவாங்க. இலை போட்டு தண்ணீர் வச்சிகிட்டு அவங்க அவங்களுக்கு என்ன தேவைன்னு கேக்கணும். இட்லி, பூரி, வடை, பொங்கல், தோசை அப்படின்னு வகைவகையா சொல்லுவாங்க. சாம்பார் சட்னின்னு தேவைக்கு தகுந்தவாறு கேட்டு போடணும்.
பரிமாறும்போது அவங்க முகத்தில் தெரியும் உணவு எப்படி இருக்குதுன்னு. சாப்பிட்டு முடிச்சதும் இலை எடுக்கணும். சாப்பிடறவங்களுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சி குடுக்கணும் அது ஒரு பெரிய கலைங்க.
எச்சில் இலையை எடுக்கறோம்னு நான் எப்பவும் கேவலமா நினைச்சது கிடையாது. எந்த நேரமும் நின்னுகிட்டே இருக்குறதுதாங்க இந்த வேலையில ஒரு கஷ்டமான விஷயம். கொரோனா காலத்துல குறிப்பிட்ட நேரம் தான் ஓட்டல் இருந்தது. கூலியும் குறைவா தான் கொடுத்தாங்க. அத வச்சிகிட்டு குடும்பத்தை ஓட்டணும். இப்பல்லாம் காய்கறி விலைவாசி அதிகமாயிடுச்சு. அதனால உணவு விலையும் கூடிடுச்சு. இப்பலா முன்ன மாதிரி இல்ல. கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் குறைய ஆரம்பிச்சிடுச்சு. ஒரு ஓட்டலுக்கு சப்ளை செய்கிறவர்களை குறைந்தது மூணு பேராவது வேணும். பெரிய ஓட்டல்களாயிருந்தா 20 பேர் தேவைப்படும். தினம் தினமும் வாங்குகிற கூலி அன்றாடம் சாப்பாட்டுக்கே சரியாயிடும். இதுல சேமிப்பு எல்லாம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. சப்ளை செய்கிற வேலையில குடும்பம் நடத்துறது அப்படிங்கறது ரொம்ப சிரமம். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதனால குடும்ப சுமை பெருசா தெரியலீங்க. கல்யாணம், குழந்தை அப்படின்னு ஆகிட்டா என்ன பண்ண போறேன்னு எனக்கு புரியல. அதேபோல நிரந்தர வேலையும் இல்ல இது. பாப்போம், இன்னும் எவ்வளவு காலம் இந்த வேலை செய்ய முடியுதுனு.
ஒவ்வொரு முறையும் ஒரு உணவு விடுதியில் நாம் சாப்பிடுகிற பொழுது நமக்கு வழி பறிமாறுகிறவர்களை பற்றி நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்குள்ளும் ஒரு வாழ்க்கை இருப்பதை நாம் தெரிந்து கொள்வது கூட இல்லை. இப்படியும் இன்னமும் எவ்வளவு எளிய மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
– ஜோதி நரசிம்மன்
முந்தைய அத்தியாயத்தை படிக்க… எளியோரின் வலிமைக் கதைகள் 33 : ‘எழுதிக் கொடுக்கிற மனுவால நல்லது நடக்குதுனா மகிழ்ச்சிதான்’ Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM