சென்னை: சிறு, குறு தொழில் முனைவோர் (MSME) தினம் ஜூன் 27-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எஸ்பிஐ வழங்கும் ‘இந்து தமிழ் திசை – கனவு மெய்ப்பட’ என்ற பெயரிலான தொழில் முனைவோர்களுக்கான திருவிழா சென்னை தியாகராய நகரில் உள்ள ரெசிடென்ஸி டவரில் ஜூன் 28-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
ஆலோசனைகள்
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று கருத்துரை வழங்குகிறார்.
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் ஐஏஎஸ், தமிழ்நாடு ஸ்டார்ட்அப், இன்னோவேஷன் மிஷன் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவராஜ் ராமநாதன், தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன், சென்னை வட்டபாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா ராயபாரம் ஆகியோர் பங்கேற்று, சிறு, குறு தொழில்முனைவோருக்கான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
தமிழகத்தின் ஜிடிபி தற்போது 330 பில்லியன் டாலராக உள்ளது. இதை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையை அடைவதற்கு சிறு,குறு தொழில் துறையின் பங்கு மிகவும் அவசியம்.
வங்கிக் கடன்
அந்த வகையில் சிறு, குறுதொழில்களை தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, அந்த தொழில்களுக்கான வங்கி கடன் திட்டங்கள் பற்றி பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவை ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பி.லிட்., மற்றும் குட்வில் கமாடிட்டிஸ் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன. நியூஸ் 7 தமிழ் டெலிவிஷன் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00712 என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ளவும்.