புதுடெல்லி: தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விஎல் – எஸ்ஆர்எஸ்ஏஎம் ரக ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை ஏவுகணை, வான்வெளி மற்றும் இதர போரக்கப்பல்களின் தாக்குதலிலிருந்து நமது கப்பலை பாதுகாக்கும் வல்லமை கொண்டதாகும்.
ஏவுகணை சோதனை வெற்றிக்காக கடற்படைக்கும் ராணு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய கடற்படையின் திறனை மேலும் அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை இம்மாத ஆரம்பத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.