லண்டன்,
இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்தனர். இதன்படி, கடந்த 2008ம் ஆண்டு அந்த ஆய்வு தொடங்கியது.
ரியோ டி ஜெனீரோவை சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேர் கலந்து கொண்டனர். 2020ம் ஆண்டு வரை, 12 ஆண்டுகள் ஆய்வு நடந்து அதன் முடிவுகள் பெறப்பட்டன.
அதில், முதியோர்களுக்கு மேற்கொள்ளும் பரிசோதனையில் சமநிலை பரிசோதனையும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
அது என்ன சமநிலை பரிசோதனை…? இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் முதலில், உங்களது ஒரு காலை மேலே தூக்குங்கள் என கூறப்பட்டு உள்ளது. அதனை மற்றொரு காலின் கீழே, பின்பக்கத்தில் வைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். கைகள் இரண்டும், இரு பக்கங்களில் தளர்வாக விடப்பட்டு, நேராக பார்க்கும்படி அவர்களிடம் கூறியுள்ளனர்.
ஆய்வில் கலந்து கொண்டோருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வில் 5ல் ஒருவர் தோல்வி அடைந்து உள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில், ஆய்வில் கலந்து கொண்ட 123 பேர் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்து உள்ளனர்.
வயது, பாலினம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பரிசீலித்ததன் அடிப்படையில், ஒரு காலில் ஆதரவின்றி 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால், ஒரு தசாப்தத்தில் அவருக்கு மரணம் ஏற்பட கூடிய ஆபத்து 84 சதவீதம் உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.